Friday, July 04, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-1

விதியின் வழியே பயணிக்கும் சராசரி சாமானியர்கள் நாம் விதியின் விளையாட்டுக்களில் பயணித்து இறுதியில் விதிப்பயன்படி நம் வாழ்கைமுடிவதற்கிடையில் தான் எத்தனை எத்தனை கஸ்டங்கள்,சந்தோசங்களை எல்லாம் தாண்டி வருகின்றோம்.அப்படி விதியின் விளையாட்டில் பயணிக்கும் சாதாரன சாமானியன் நான்.

என் பெயர் ராம்சரன்.எங்கள் மண்ணில் யுத்தம் எத்தனையோ இளைஞர்களின் கனவுகளை,பிரகாசமான எதிர்க்காலத்தை சிதைத்துவிட்டது அப்படி கனவுகள்,பிரகாசமான எதிர்காலம் சிதைக்கப்பட்ட ஒரு சாராசரி இளைஞன் தான் நான்..


இங்கே இருக்கின்ற பெரும்பாலான இளைஞர்களின் கனவு வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்பது காரணம் பொருளாதார தேடலில் தொலைந்துபோக இன்றைய சூழலில் இருக்கின்ற ஒரே வழி வெளிநாட்டுக்கு போய் உழைப்பதுதான்.அங்கே போனவர்கள் எல்லோறும் ஜாலியான சந்தோசமான வாழ்கையை வாழ்கின்றார்கள் என்று வெளியே இருந்து பார்பவர்களிடையே ஒரு பிம்பம் நிலவுகின்றது.இது முற்றிலும் தவறான பிம்பம் காரணம் கனவுகளை,தனிப்பட்ட ஆசைகளை துறந்து குடும்பச் சுமையை சுமக்க வெளிநாடு நோக்கி பயணிக்கும் அனைவருமே சுமைதாங்கிகள்.ஒரு டொலர் இங்கே நூறுரூபாயாக மாறுகின்றதே தவிற வேறு எதுவும் சொல்லிக்கொள்ளும் படி சந்தோசத்தை தருவது இல்லை.

எனக்கும் வெளிநாட்டுக்கு போகவேண்டும் நிறைய உழைக்கவேண்டும் என்று கனவுகள் கண்ணில் கலங்கடித்தகாலம் அது.முதல் கட்டமாக மொழியறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற நிலையில் வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் ஒரு  நிறுவணத்தில் மொழிப்பயிற்சிக்காக சென்று இருந்தேன்.முன் பின் தெரியாத தேசங்கள் என்றாலும் மொழி தெரிந்தால் மனசில் ஒரு தன்னம்பிக்கை வரும் பாருங்கள் அதற்கு நிகரான நம்பிக்கையை அளிக்கின்ற விடயம் வேறும் ஏதும் சிறப்பாக இருக்க சாத்தியம் இல்லை.

நான் மொழிப்பயிற்சிக்காக சென்ற இடம் அழகாபுரி என்ற ஊர் எங்கள் ஊரில் இருந்து 72 கிலோமீட்டரில் இருக்கும் இடம் என்றாலும் இதற்கு முன் அங்கே போனது இல்லை என்று சொல்லமுடியாது ஒரு சில தடவைகள் போயிருக்கின்றேன் ஆனால் பரிட்சயம் இல்லாத ஊர்.அழகாபுரிக்கு நான் மொழிப்பயிற்சிக்காக செல்லும் போது எனக்குள் பல கேள்விகள் .ஒரு சின்ன ஊரில் இருந்து வரும் நான் இங்கே இருக்கும் பல படித்தவர்களுடன் போட்டி போட்டு மொழிப்புலமையை காட்டமுடியுமா? கிரிக்கெட் வர்ணனையை பார்த்து ஆங்கிலம் கற்றவன் நான் என்னால் ஆங்கிலத்தில் சரளமாக பேசுபவர்களுடன் ஒன்றாக கல்வி கற்றமுடியுமா? என்று பல கேள்விகள் ஆனால் அங்கே போனதும் யதார்தத்தை எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசினேன்.விளைவு சிறிதுகாலத்தில் என் கூட படித்தவர்களுக்கு சிறிதும் குறையாமல் சமனாக என்னால் ஆங்கிலம் பேசமுடிந்தது

இந்த காலகட்டத்தில் என்னுடன் ஒன்றாக மொழிப்பயிற்சியை பெறவந்திருந்த ஒருத்தியின் மேல் காதல் வந்தது.இந்தக்காதல் பற்றியும் இந்தக்கதையில் பேசப்போவது இல்லை பிறகு என்ன பேசப்போகின்றேன் என்று நினைக்கின்றீர்களா? என் மனம் கவர்ந்தவள் இந்தக்கதையில் சில இடங்களில் மாத்திரமே வந்து போவாள் என்பதால் அவள் பற்றியோ என் காதல் கதை பற்றியோ அதிக விளக்கம் தேவையில்லை அதைவிட என்னை பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை காரணம் இந்தக்கதையின் நாயகன் நான் இல்லை.இந்தகதையில் உங்களுடன் பயணிக்கும் உங்கள் உணர்வுகளுடன் பயணிக்கும் ஒரு பாத்திரம் அவ்வளவு தான் என்பதால் எனக்கான அறிமுகம் போதும்.

சரி என்னைப்பற்றியும் பேசவில்லை என் காதல் பற்றியும் பேசவில்லை என்றால் யார் பற்றி பேசப்போகின்றோம்.ஒரு தேவதையை பற்றி பேசப்போகின்றோம்.என்ன குழப்பமாக இருக்கின்றதா.தேவதையை பற்றி பேசப்போகின்றோம் என்கிறான்.ஆனால் காதல் பற்றி பேசவில்லை என்று சொல்லுறான் என்று.சின்ன வயதில் இருந்து என் நட்புவட்டத்தில் பெண்கள் இருந்தது இல்லை ராம்சரன் அகராதியில் பெண்களின் நட்பு எப்போதும் இருக்காது  பாடசாலைக்காலத்தில் இருந்தே பெண்களுடனான நட்பு சரிப்பட்டு வருவதில்லை.காரணமும் நான் அறியமுட்பட்டது இல்லை.சரியாக சொன்னால் ஒரு வித தயக்கம் என்றே சொல்லாம் இதனாலோ என்னவே நட்பில் ஆண் பெண் நட்பு என்ற அழகியவிடயத்தை பலவருடங்களாக நான் தவறவிட்டுவிட்டேன்.அழகாபுரிக்கு சென்ற பிறகுதான் நிறைய நண்பிகள் அறிமுகம் ஆனார்கள் அவர்களுடன் எல்லாம் ஒரு ஆத்மாத்தமான நட்பு தொடர்கின்றது.

அப்படி அழகாபுரியில் எனக்கு அறிமுகமான தேவதைதான் அவள்.அவள் பெயர் வைஸ்னவி.தேவதை என்று ஏன் சொல்லுகின்றேன் என்றால் எல்லாவிடயத்திலும் அவள் அழகு தவறான வர்ணனையில்லை எல்லாவிதத்திலும் என்று சொன்னது அவள் புற அழகைப்போல அவள் அகமும் அதாவது அவள் மனமும் அழகானது,அந்த மனம் முழுக்க அன்பை மட்டுமே வைத்து இருப்பவள்..வர்ணிப்புக்களுக்கு அப்பாற்பட்ட அழகி,கூர்மையான விழிகளில் வாள்களை ஏந்தி பார்பவரை ஒரு பார்வையிலே சாய்த்துவிடும் சாலமீன் விழிகளில் கிறங்கடிக்கும் அழகி ஆக மொத்தத்தில் அப்பழுக்கற்ற பேரழகி 

வர்ணனைக்காக அவள் என்று சொன்னாலும் உண்மையில் நான் அக்கா என்றே அழைப்பது வழமை.ஆண் பெண் நட்பின் அற்புதத்தை எனக்கு அறியவைத்தவர் வைஸ்ணவி அக்காதான்.என் வயதுதான் மரியாதை நிமித்தமாக அக்கா என்று அழைத்து பழகிவிட்டது. வைஸ்னவி அக்கா என் நட்பு வட்டத்தில் அன்பால் மட்டுமே இணைந்த முதல் நண்பி.நான் மொழிப்பயிற்சிக்காக சென்ற நிறுவணத்தில் ஒரு மாதத்தின் பிறகு வந்து சேர்ந்திருந்தார் வைஸ்னவி.

ஹாய் ஜ ஆம் ராம் சரன் ஹாய் ஜ ஆம் வைஸ்னவி இவ்வாறே எனக்கும் அவருக்குமான் அறிமுகம் ஆரம்பத்தில் சில நாட்கள் இருந்தது ஒரு பெண்ணின் மேல் காதல் வந்தது என்று சொன்னேன் அல்லவா ஒரு நாள் அவளுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது தூர இருந்து வைஸ்னவி அக்கா அழைத்தார் அவர் அழைத்தது தெரிந்தது ஆனால் அவர் பேசியது புரியவில்லை.நான் அவளுடன் பேசும் அவசரத்தில் வைஸ்னவி அக்கா கேட்டது புரியவில்லை.அவளை அனுப்பிவிட்டு வந்தபோது வைஸ்னவி அக்கா கேட்டார் என்னா பாஸ் நம்பரை கேட்டால் பொண்ணுங்க மாதிரி வெட்கப்பட்டு ஒடுறீங்க என்று.நான் இல்லை அக்கா நான் அந்த பொண்ணுடன் பேசிக்கொண்டு இருந்ததால் நீங்கள் கேட்டது புரியவுல்லை என்று நம்பரை சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

என்னால் நம்பவே முடியவில்லை.அழகான பெண்கள் என்றால் கொஞ்சம் திமிரும் கர்வமும் இருக்கும் என்னை மாதிரி பார்த உடன் பிடிக்காத பார்க்கபார்க்க பிடிக்கும் தனுஸ் ரக பசங்களுடன் எல்லாம் பேசுவார்களா என்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.ஆனால் வைஸ்ணவி அக்கா வித்தியாசமானவர் அவரிடம் திமிரோ கர்வமோ ஒரு துளிகூட இருக்கவில்லை.அவர் மனசு முழுக்க அன்பு மட்டுமே நிறைந்திருந்தது.அந்த அன்புதான் என்னையும் அவரையும் நட்பு என்ற வட்டத்தில் இணைத்தது.

இங்கே என்னுடன் மொழிப்பயிற்சியை பெற வந்திருந்த என் சக நண்பர்கள் எல்லோறிடம் ஒரே கனவு அது வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்பது.எங்கள் கனவுகளுக்கான முதல் அடியை நாங்கள் ஆரம்பித்து கற்றுக்கொண்டு இருக்கின்றோம் ஒரு குறுகிய கால வாழ்கை இது ஒரு சில மாதங்களின் பின் ஆளுக்கொரு திசையில் போய்விடுவோம்.என்பதை நாங்கள் உணர்ந்திருந்தாலும் ஆளமான ஒரு ஆத்மாத்தமான நட்பு எல்லோர் மனங்களிலும் இருந்தது.

என்னுடன் நெருங்கிப்பழகும் முதல் நண்பி வைஸ்னவி அக்கா பேரழகியாக இருந்தாலும் அவருடன் அருகில் இருக்கும் நிமிடங்களில் எப்பொழுதும் என் மனம் சஞ்சலப்பட்டது இல்லை.ஒரு துளியேனும் அவர் மேல் தவறான எண்ணம் வந்தது இல்லை.நான் ஒரு சராசரி இளைஞன் முனிவரோ  துறவியோ இல்லை.சில பெண்களிடம் என் மனம் சஞ்சலப்பட்டதுண்டு.ஆனால் வைஸ்னவி அக்காவிடம் மட்டும் என் மனம் உணர்ந்துகொண்டது முழுக்கமுழுக்க நட்பு என்ற ஒரு அழகிய விடயத்தை மட்டுமே.

ஆண் பெண் நட்பை இன்னும் எம் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அது காதலாகவோ இல்லை கள்ள உறவாகவோத்தான் இருக்கும் என்ற சமூகத்தில் வைஸ்னவி அக்காவுக்கும் எனக்குமான நட்பை மற்றவகள் எப்படி பார்பார்கள் என்ற கேள்வி என் மனசில் இருந்தது ஒரு முறை வைஸ்னவி அக்காவிடமே கேட்டுவிட்டேன் அக்கா நம் நட்பை மற்றவர்கள் தவறாக நினைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று.அவர் சிம்பிளாக சொன்னார்.நம் மனசுக்கு நாம் சரியாக இருப்பது தெரியும் ராம் பிறகு ஏன் மற்றவர்களை பற்றி அலட்டிக்கொள்ளுவான் என்று.

ஆனால் கால ஒட்டத்தில் நான் பயந்தது நடந்தது ஏனையவர்களின் பார்வையில் எம் நட்பு கலங்கமானதாகவே பெரும்பாலும் பார்க்கப்பட்டது.நான் ஒரு பெண்மேல் காதல் வந்தது என்று சொன்னேன் அல்லவா அவளே எனக்கும் வைஸ்னவி அக்காவுக்குமான நட்பை புரிந்துகொள்ளவில்லை.இதுதான் யதார்த்த சமூகம்.ஆனால் ஆண் பெண் நட்பின் மகத்துவத்தை வார்தைகளால் வர்ணிக்கமுடியாது அது ஒரு அழகிய உணர்வு. வாழ்ந்து பார்த்தால் தான் அதை உணர்ந்துகொள்ளமுடியும்.

எப்பொழுதும் கல கல என எல்லோறிடமும் சிரித்து பழகும் வைஸ்னவி அக்காவின் கண்களில் ஒரு மெலிதான சோகம் இழையோடியதை நான் அவதானிக்காமல் இல்லை.அவர் கண்களின் ஒரு தேடல்  முற்றுப்பெறாத ஒரு தேடலை அவரின் அழகிய விழிகளில் வழிந்தோடும் மெல்லிய சோகத்தின் ஊடாக  அவர் விழிகளை சந்திக்கும் பொழுதுகளில் எல்லாம் அவதானித்துள்ளேன்.

ஒரு நாள் அவராகவே கேட்டார் ராம்.வாழ்கையில் யார் மேலயாவது லவ் வந்திருக்கா உனக்கு என்று.நானும் ஆம் அக்கா பாடசாலைக்காலத்தில் ஒருத்திமேல லவ் இருந்தது.இப்போது நம்ம கூட கற்கும் ஒருத்தி மேல காதல் இருக்கு என்று என் காதல் கதையை சொன்னேன்.பிறகு அவராகத்தான் தொடர்ந்தார்.தனக்கும் ஒருவர் மேல் காதல் வந்து இருக்கு என்று அந்த நொடிகளில் அவரது விழிகளில் வழிந்தோடிய ஒருவித வெருமை கலந்த ஏக்கத்தின் தேடலை நான் உணர்ந்துகொண்டேன்.நிச்சயம் அவரது விழிகளின் சோகத்தின் பின்னால் இருக்கும்  தேடலின் கதையை முழுமையாக கேட்கனும் போல இருந்தது.

(தொடரும்)

Post Comment

6 comments:

ஆத்மா said...

ஆண் பெண் நட்பு இறுதிவரை நட்பாக இருந்து அரிதுதான்...
ஆண் பெண் நட்புப் ப்பற்றிப் பேசும் ஒவ்வொரு பொழுதும் எனக்கு தோழா தோழா பாடல்தான் நினைவுக்கு வரும்

தொடருங்கள்

தனிமரம் said...

ஆஹா நட்புக்கு இடையில்பல தேடல்!ம்ம் தொடருங்கள் பாஸ்§

K.s.s.Rajh said...

@ஆத்மா

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@தனிமரம்

நன்றி பாஸ்

Unknown said...

வணக்கம்,ராஜ்!நலமா?///தன்னிலை விளக்கத்துடன்,நட்புக்கும் காதலுக்கும் அருமையாக விளக்கம் கொடுத்து ஆரம்பித்திருக்கிறீர்கள்,நன்று!தொடரட்டும்!!வாழ்த்துக்கள்!!!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திரு வை.கோபாலகிருஷ்ணன் http://gopu1949.blogspot.in/ என்ற தன்னுடைய தளத்தில் உங்களைப் பற்றி விவாதிக்கிறார். உங்கள் பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
http://www.drbjambulingam.blogspot.com/
http://www.ponnibuddha.blogspot.com/

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails