இந்த உலகத்தில் விலைகொடுத்து வாங்க முடியாத அற்புதமான உணர்வு நட்பு
நண்பர்கள் இல்லாத மனிதர்களை காணமுடியாது நட்பினால் உயர்ந்தவர்களும் உண்டு நண்பர்களால் தாழ்ந்தவர்களும் உண்டு.நட்பு என்பது சுயநலம் கருதாததாக இருக்கவேண்டும் நண்பர்களுக்கு பிரச்சனை வரலாம் ஆனால் சரியான புரிந்துணர்வின் மூலம் பிரச்சனையை கையாண்டால் எந்த பிரச்சனையும் இலகுவில் மறைந்துவிடும்.
நிலையற்ற இந்த மனிதவாழ்க்கையில் எத்தனை மனிதர்கள் நம் வாழ்வில் வந்து போவார்கள் அதில் நண்பர்களுக்கு எப்பவும் தனி இடம் இருக்கும் காரணம் எம்மை இந்த உலகிற்கு காட்டிய தாய்,தந்தை,சகோதரர்கள்,உறவுகள்,காதலி,மனைவி...இப்படி எம்வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளிடம் சொல்ல முடியாத பல விடயங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம் இதுதான் நட்பின் சிறப்பு .
அப்படி என் வாழ்க்கையில் இதுவரை நான் சந்தித்த என் நண்பர்களை பற்றிய ஒரு தொடர் இது இதில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள்,வலிகள்,வேதனைகள் போன்றவை இருக்கும்.

சுஜந்தன்
என்னுடன் 9ம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரை படித்தவன் இவனுக்கும் எனக்கும் ஆழமான நட்பு உருவாகிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது.9,10,வகுப்புகளில் இவனுக்கும் எனக்கும் பெரிதாக நட்பு இல்லை கூடப் படிக்கும் பையன் அவ்வளவுதான் அதைவிட எனக்கும் இவனுக்கு எப்போது சண்டைதான் ஒற்றுமையாக இருப்பது இல்லை.ஒரு முறை என் மீது இருந்த சண்டை காரணமாக எனது புதுக்குடை ஒன்றை இவன் எடுத்து உடைத்துவிட்டான்.
சுஜந்தன் தான் குடையை உடைத்துவிட்டான் என்று இன்னும் ஒரு நண்பன் சொல்லித்தான் எனக்கு தெரியும் நான் சுஜந்தனிடம் ஏன் குடையை உடைத்தாய் என்று சண்டை போட்டுவிட்டு விட்டுவிட்டேன்.அதுக்கு பிறகு கடும் மழைக்காலம் ஆரம்பித்தால் எனக்கு பாடசாலைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது காரணம் அப்போது எனக்கு இருந்த பொருளாதார பிரச்சனை காரணமாக உடனடியாக புதுக்குடை வாங்க வசதி இல்லை ஆனால் இதை நான் வெளியில் காட்டிக்கொள்வது இல்லை.
இதை எப்படியோ அறிந்து கொண்ட சுஜந்தன் ஒரு நாள் என்னிடம் வந்து ராஜ் மன்னிச்சுக்கொள் எனக்கு உன் பிரச்சனை தெரியாது சாரிடா என்று சொன்னான் நானும் பரவாயில்லை விடு மச்சி என்றேன் அன்றில் இருந்து எமக்குள் இருந்த சண்டை ஓய்ந்து ஒரு ஆத்மாத்தமான நட்பு உருவாகியது.
பின்பு எனக்கும் அவனுக்கும் ஒரே பெண்ணின் மீது காதல் உருவானது.இதை அறிந்து கொண்ட அவன் எனக்காக விட்டு கொடுத்து ஒதுங்கியவன் ஒதுங்கியது மட்டும் இல்லாமல் பல வகையில் அந்தக் காதலுக்கு எனக்கு உதவி செய்தவன்.ஆனால் கடைசிவரை நான் என் காதலை அந்த பெண்ணிடம் சொல்லவேயில்லை.
பின்பு உயர்தரம் படிக்கும் போது அவன் ஒரு பெண்ணை காதலித்தான் அவளிடம் அந்த காதலை சொன்ன போது அவள் மறுத்துவிட்டாள் எந்தப் பொண்ணு காதலை சொன்னதும் ஓக்கே சொல்லியிருக்காள். நீ தொடர்ந்து முயற்சி செய் மச்சி நான் இருக்கேன் உன்னுடன் என்று அவனுக்கு ஆறுதல் கூறி அவனின் காதலுக்காக நான் அலைந்து திரிந்த நினைவுகள்.பல மையில் தூரம் சைக்கிளில் அவன் காதலித்த பெண்ணை தேடிச்சென்ற காலங்கள்.இப்படி இன்றும் பசுமையாக நெஞ்சில் நிற்கின்றது நினைவுகள்.
ஆனால் காலம் செய்த கோலத்தில் எம்மண்ணின் கொடிய யுத்தத்தினால் காவு வாங்கிய உயிர்களில் சுஜனும் கலந்துவிட்டான்.இவன் இறந்தது கூட எனக்கு தெரியாது சில மாதங்களின் பின்புதான் எனக்கு தெரியும்.அவனுக்காக கண்ணீர் சிந்தத்தான் என் கண்களுக்கு தெரிந்தது...
மரியயூலியன்
யூலியனுக்கும் எனக்குமான நட்பு மலர்ந்தது உயர்தரம் படிக்கும் போதுதான் அதுவும் அவனும் நானும் ஒரே பிரிவு கிடையாது நான் உயர்தரத்தில் வர்த்தக துறையில் கல்வி பயின்றேன் அவன் கலைத்துறையில் கல்வி பயின்றான் ஆனா அவனையும் என்னையும் இணைத்தது கிரிக்கெட் ஆம் தாதா சவ்ரவ் கங்குலியின் தீவிரமான ரசிகன் அவன்.கங்குலியின் ரசிகர்களாக எமக்குள் அரும்பிய நட்பு பின்பு பல ஆண்டுகள் பழகிய நட்பை போல வலுப்பெற்றது.
நானும் அவனும் மணிக்கணக்கில் கங்குலி பற்றி பேசிக்கொண்டேயிருப்போம் கங்குலியின் சாதனைகள்,அவர் பற்றிய புள்ளிவிபரங்கள் அனைத்தையும் அப்படியே ஞாபகம் வைத்து சொல்வான் குறிப்பிட்டு சொன்னால் அப்போது இணையதள வசதிகள் எதுவும் எங்கள் மண்ணில் இல்லை.கங்குலி பற்றிய அனைத்து விபரங்களும் அறிய நான் நாடுவது யூலியனைத்தான்.
சுஜந்தனைப்போலவே யுத்தம் காவுவாங்கிய உயிர்களுள் யூலியனும் கலந்துவிட்டான்
*********************************************************************************
என் ப்ரண்ட போல யாரு மச்சான்?
*********************************************************************************
(நட்பு தொடரும்)
|
10 comments:
நண்பர்கள் முகம் தொலைந்தாலும் முன் பழகிய நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் அந்த நண்பர்கள் மரணம் பிரித்தாலும் பிரியாத நினைவு உங்களிடம் இருக்கு !ம்ம்ம்
அதுதான் வருடம் அரைவாசி போய் விட்டதே பிறகு ஏன் வலையில் மேலே அந்தப்படம் <<,,,!!!!ஒரு டவுட்!ஹீஈஈஈஈஈஈஈஈஈ
@தனிமரம்
படத்தை தூக்கிட்டேன் நன்றி பாஸ்
வணக்கம்,ராஜ்!நட்பு........அது தானாக வர வேண்டும்!உங்களுக்கு வந்திருக்கிறது.அந்த நண்பர்களுக்கு என் அஞ்சலிகள்!
உங்களது நட்பு குறித்த அனைத்து பதிவுகளும் கடைசியில் மனதை கனக்க செய்து விடுகிறது.
நண்பா,
நட்புக்கு விலை ஏது?
நண்பர்களின் துயரம்...
இந்த யுத்தத்தால் எத்தனை நண்பர்கள் துயரத்தில் வாடுகிறார்களோ?
நல்ல நண்பர்கள் கிடப்பது கடவுள் வரம் ...
மனதை நெகிழ வைத்த பதிவு ! நண்பரே தொடருங்கள் !
நன்பர்களை இழந்து தவிக்கும் உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியலை தம்பி. இந்த பதிவுக்கு என்னால் லைக் போட முடியாது. மன்னிக்க. இது விரும்பப்பட வேண்டிய பதிவல்ல
அனைவருக்கும் நன்றி நண்பர்களே
Post a Comment