Monday, November 19, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -8

கெந்திக்கெந்தி கம்பின் உதவியுடன் சதீஸ் ரோட்டுக்கு மறுகரைக்கு வரவும்.எங்கிருந்தோ வந்த எரிகனை ஒன்று அவன் இரவு படுத்திருந்த கடைக்கு மேல் விழவும் சரியாக இருந்தது.அப்படியே ரோட்டில் விழுந்து படுத்தான்.

அந்த பகுதி எங்கும் சில எரிகணைகள் விழுந்துவெடித்தன.சிறுது நேரத்தில் அந்த பிரதேசம் அமைதியானது.மெதுவாக தலையை தூக்கி பார்த்தான் சதீஸ் அவன் இரவு படுத்திருந்த கடை நொருங்கிப்போய் இருந்தது.அதில் இருவர் இருந்தார்களே அவர்கள் என்ன ஆனார்கள்.சதீஸ் மனம் படபடத்தது அருகே போய் சதீஸ் பார்த்தான்.


ஒருவரின் உடல் சிதறிக்கிடந்தது.இன்னும் ஒருவர் முணங்கிக்கொண்டு இருந்தார்.மெதுவாக அவரிடம் சென்று பார்த்தான்.அவரின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு இருந்தது.அவரிடம் இருந்த சாரத்தை கிழித்து அவரின் காயத்துக்கு ஒரு கட்டு போட்டான்.பின்பு வீட்டுப்பொருற்களை ஏற்றிக்கொண்டுவந்த ஒரு டக்டரை வழிமறிந்து அதில் அவரை ஏற்றி அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு.சிறிது நேரம் வீதியில் உட்கார்ந்துவிட்டான்

கணப்பொழுதில் நடந்து முடிந்த சம்பவங்கள் அவன் மனதில் நிழல் போல வந்தன.கண்முன்னே ஒருவர் உடல் சிதறி பலியானதை நினைத்து வருந்துவதா இல்லை தானும் ரோட்டைக் கடக்காமல் சிறிது நேரம் அங்கே நின்று இருந்தால் தனது முடிவும் இப்படித்தான் ஆகியிருக்கும். விதியின் கணக்கில் இன்னும் தனக்கு உலகவாழ்விற்கு முடிவுரை எழுதப்படவில்லை என்று சந்தோசம் கொள்வதா ஒன்றுமே புரியவில்லை.


இறந்தவர் யாராக இருக்கும் அவரது குடும்பத்திற்கு அது தெரியவருமா?ஒருவேளை காயப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பியவரிடம் விசாரித்தால் தெரியும் ஆனால் அவரும் பேசும் நிலையில் இல்லை பலத்தகாயம்,கடவுளே அவர் குணமடையவேண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கு செய்தி போய்ச்சேரவேண்டும் என்று கல்லாய் இருக்கும் கடவுளைவேண்டிக்கொண்டு.மெது மெதுவாக கெந்திக் கெந்தி ரோட்டுக்கு மறுகரையில் இருந்த மக்கள் குடியிருப்பை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

கால் அதிகமாக வீங்கிவிட்டது அசைக்கவே முடியவில்லை இரண்டுநாட்களாகிவிட்டது உணவு உண்டு.உடல் களைத்து இயங்க மறுத்தாலும்.மனதில் இருந்த தன்னம்பிக்கை கொடுத்த தைரியத்தில் இயங்கிக்கொண்டு இருந்தான்.

ஒரு பெண்மணியிடம் தனது சித்தப்பாவின் பெயரை சொல்லி இப்படி ரோட்டுக்கு அங்கால பக்கத்தில் இருந்தார்கள் அங்க இருந்த சனம் எல்லாம் இந்தப் பக்கம் வந்திட்டாம் அவரை தெரியுமா என்று கேட்டான்.

அப்போது அங்கே வந்த அந்த பெண்ணின் மகன் சதீஸ் அண்ண நீங்களா வாங்க நீங்க எப்படி இங்க?. இது எங்கள் வீடுதான் வாங்க என்று அழைத்தான்.அவன் முகத்தை எங்கோ பார்த்தாக சதீஸ்க்கு  ஞாபகம். ஆம் எப்போது ஏதோ ஒரு சந்தர்பத்தில் சதீஸிடம் உதவி பெற்றவன் அவன் .சதீஸ் செய்த உதவி சிறியது என்றாலும் தக்க தருணத்தில் அவன் செய்த உதவி இன்று அவனுக்கு இயலாத நிலையில் உதவியது.

அந்த பெண்ணின் மகன் சொன்னான் உங்கள் சித்தப்பாவை எனக்குத்தெரியும் பக்கத்தில் தான் இருக்கின்றார்கள் வாருங்கள் கூட்டிச்செல்கின்றேன் என்று தனது சைக்கிள் சதீஸை ஏற்றிக்கொண்டு இருவரும் பயணிக்கத்தொடங்கினர்.அந்தப் பையன் வீட்டில் தந்த ப்ளேன் ரீ மட்டுமே இரண்டு நாட்களாக உணவைக்காணாத அவன் இரைப்பைக்கு ஆறுதல்.

தன்னம்பிக்கையின் உச்சகட்டம் வாழ்க்கைக்கும் தன்னம்பிக்கைக்கும் இடையிலான போராட்டம்,மகிழ்ச்சியாக வாழ்க்கையின் சந்தோசங்களை அனுபவிக்கவேண்டிய டீன் ஏஜ் வயதில் இப்படி ஒரு நிலை சதீஸ்க்கு.

சதீஸ் மட்டுமா அவனைப்போல எத்தனை மக்கள் தங்கள் குடும்பத்தை தவறவிட்டு அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா இல்லையா என்று தெரியாத நிலையில் தவித்துக்கொண்டு இருப்பார்கள்.வார்த்தைகளால் வடித்து விட முடியாத வலி இது அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும்.

மரணம் என்பது இலகுவானது ஆனால் வாழ்வதுதான் கடினம்.அதுவும்  எல்லாவற்றையும் இழந்து  தன்னம்பிக்கையை மட்டும் வைத்து வாழ்வதற்கான போராட்டம் இருக்கே அது கொடுமையிலும் கொடுமை.கண்முன்னே உடல் சிதறி இறக்கும் மனிதர்கள்,உறவுகளை பறிகொடுத்தவர்களின் கதறல்கள்,பசி,பட்டினி,உடம்பில் சக்தியின்றி துவண்டு போய் இருக்கும் போது தன்னம்பிக்கையை மட்டும் வைத்து என்ன செய்வது.ஆனாலும் என்றோ ஒரு நாள் இது எல்லாம் மாறிவிடும் என்ற நம்பிக்கையில் வன்னியில் இருந்த ஒவ்வொறு மக்களும் அப்போது நினைத்துக்கொண்டு இருந்தனர்

எங்களை வைத்து அரசியல் இலாபம் தேடும் தமிழக அரசியல் வாதிகள் யாராவது ஒருவர் அந்த சூழ்நிலையில் அங்கே வாழ்ந்திருந்தால் அவரது ஆயுளுக்கும் ஏன் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஈழத்தமிழனை வைத்து அரசியில் பிழைப்பு நடத்த மாட்டார்.

சதீஸ் மனதில் பல கேள்விகள் சித்தப்பாவை கண்டு பிடித்துவிடுவேனா இல்லை தனது,தாய் தந்தையை தேடலாமா?ஆனால் தாய் தந்தையை தேடுவதில் உள்ள பிரச்சனை அவர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்று தெரியாது.ஆனால் சித்தப்பா இருக்கும் இடம் ஓரளவு இந்தப்பையன் மூலம் தெரிந்துவிட்டது எனவே முதலில் சித்தப்பாவிடம் போவோம் அவருக்கு தனது தாய் தந்தை பற்றி எங்கே இருக்கின்றார்கள் என்று தெரிந்திருக்க சந்தர்ப்பம் இருக்கு.அதைவிட காலும் இயலாத நிலையில் பல இடங்களில் தேடிச்செல்வது என்பது இயலாத காரியம்.எனவே சித்தப்பாவிடம் போய் அவரின் உதவியுடன் தேடலாம் என்று எண்ணிக்கொண்டான்

சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்த பையன் சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்தினான் இங்கே தான் அவர்கள் இருந்தார்கள் விசாரித்துப்பார்போம் என்றான்.தற்காலிகமாக பல குடிசைகள் அந்த பகுதி எங்கும்.அங்கு இருந்த ஒருவரிடம் விசாரித்த போது.அவர் சொன்ன செய்தி இங்கே தான் இருந்தார்கள் தம்பி ஆனால் நேற்று கடுமையாக எரிகணைகள் விழுந்ததால் வேறுஇடம்  போய்விட்டார்கள் 

எங்கே போனார்கள் என்று தெரியுமா என்று கேட்ட போது அவர் ஒரு இடத்தின் பெயரை சொன்னார்.

கவலைப்படாதீங்க சதீஸ் அண்ண நேற்று இடம்பெயர்ந்து போய் இருந்தால் நிச்சயம் இன்று அங்கே தான் உங்கள் சித்தப்பா இருப்பார் என்று சதீஸுக்கு ஆறுதல் சொல்லியபடியே அந்த பையன் சைக்கிளை மிதிக்கத்தொடங்கினான்
(தொடரும்)

சாரம்-கைலி,லுங்கி
ப்ளேன் டீ-வரக்காப்பி
அங்கால பக்கம்-மறுகரை
படங்கள்-கூகுள்


Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாவற்றையும் இழந்து, தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு, வாழ்வதற்கான போராட்டம் மிகவும் கொடுமை தான்...
tm2

தனிமரம் said...

வேதனையின் விழிம்பில் நிற்கும் சதிஸ் வாழ்க்கைப்பயணம் போகும் தூரம் அதிகம் தான் தொடருங்கள் தொடர்கின்றேன் ! 

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

வலைச்சரம் கண்டேன்! வாழ்த்துக்கள்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails